தயாநிதி மாறன், சன் டைரக்ட் டி.டி. ஹெச். மற்றும் சவுத் ஆசியன் எப்.எம். நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவர்களது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
2008- 2009, மற்றும் 2009- 2010 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு
ஆய்வு செய்ய வேண்டும் என கோரி வருமான வரித்துறை தயாநிதி மாறன், சன் டைரக்ட் டி.டி.ஹெச் மற்றும் சவுத் ஆசியன் எப்.எம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து தயாநிதி மாறன் மற்றும் இரண்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை தரப்பு வழக்கறிஞரின் விவாதத்தை கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்,
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழல் நடைபெறுவதாகவும், தொழில்நுட்ப ரீதியாக பணப் பரிமாற்றம் செய்யும் போதும் பலர் அரசை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்தார்.
ஊழல்கள் நாட்டை புற்று நோய்போல் அழித்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, தயாநிதிமாறன் மற்றும் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை தயாநிதி மாறன் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.