ரூட்டு தல என்ற பட்டத்திற்கு ஆசை பட்டு, தங்களின் பட்டப்படிப்பை பற்றிக்கூட கவலைப்படாமல், கையில் கத்தியை ஏந்தி வன்முறை பாதையை நோக்கி தடம் புரண்டு போயுள்ளனர் இன்றைய கல்லூரி மாணவர்கள். இதைப் பற்றி வேதனையுடன் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
சென்னையில் இயங்கி வரும் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி உள்ளிட்டவை வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரிகள் ஆகும். மிகப்பெரிய தலைவர்களையும், விஞ்ஞானிகளையும், நீதியரசர்களையும், இன்னபிற மேதைகளையும் உருவாக்கிய சிறப்பு இவற்றுக்கு உண்டு. அப்படிப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ரூட் தல என்ற அற்ப பெயருக்காக கையில் ஆயுதங்களுடன் வலம் வருவது வேதனையை தருகிறது. இதன் காரணமாக இந்த கல்லூரிகள் அமைந்துள்ள சாலை வழியாக பேருந்துகளில் செல்லவே பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் இருந்து திருவேற்காடு செல்லும் மாநகரப் பேருந்து 29-E அரும்பாக்கம் வந்த போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் ரூட்டு தல வசந்தகுமாரை அதே கல்லூரியில் படிக்கக்கூடிய ரூட்டு தலைகள் சுருதி, மதன், ரவிவர்மா, ஆகாஷ், ரகுமான், சரவணன், கவியரசு ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் 6 மாணவர்களை கைது செய்த காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களைசிறையில் அடைத்தனர். காயமடைந்த வசந்தகுமார் கை மற்றும் தலையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.
கைது செய்யப்பட்ட மதன், சுருதி என்ற இரண்டு பேரும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் கைது செய்யப்பட்டுள்ள 4 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழிச் செல்வன் தெரிவித்துள்ளார்.
மாணவர் மோதலுக்கு முக்கிய காரணமான 90 ரூட்டுத் தலைகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் பயணிக்கும் 17 வழித் தடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அசம் பாவிதங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் துணை ஆணையர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகளிடம் பேசி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது . ரூட்டு தலைகளிடம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107ன் படி உறுதிமொழி பிராமான பத்திரத்தை துணை ஆணையர்கள் பெற்றுள்ளனர். எந்த தவறுகளையும் நாங்கள் செய்ய மாட்டோம் காவல்துறை எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் கட்டுப்படுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து காவல் துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். படிக்கும் காலங்களில் தவறான பாதையில் சென்றால் வாழ்க்கை தடம்மாறி போகும் என்பதை எடுத்துக்கூறி, உண்மையான தலைகளாக வர வேண்டும் என்றால் தடம் புரளக்கூடாது. இல்லை என்றால் வாழ்க்கை தடம் மாறிப் போய் விடும் என எச்சரித்துள்ளனர்.
Discussion about this post