சட்டத்துக்குப் புறம்பாக வீட்டில் யானைத் தந்தங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லாலுக்கு எதிராகக் கேரள வனத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் வைப்பதற்காக, திருப்பணித்துறையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடமிருந்து, நடிகர் மோகன்லால் இரண்டு யானைத் தந்தங்களை வாங்கினார். இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்காததால், நடிகர் மோகன்லால் மற்றும் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகுமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த நளினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.
சட்டத்துக்குப் புறம்பாக தந்தங்களை வைத்திருந்தது, வனத்துறை தலைமை வார்டனுக்குத் தகவல் கொடுக்காதது ஆகிய பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கொடநாடு தலைமை வனத்துறை அதிகாரி தனிக்லால், வனத்துறை சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக, பெரும்பாவூர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.