தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.
தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 2ம் தேதியிலிருந்து 31ம் தேதிவரை நடைபெற்றது.
அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்களுக்கு, மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவங்கி, வரும் 12ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழகம் முழுவதும் 45 சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 17ம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளம் மூலம் வெளியிடப்படும் என்றும், அதையடுத்து, அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 30 வரையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கென ஒதுக்கப்பட்ட இடங்களை விட, குறைவான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.