புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
புதுவையில் துணை நிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என தொடர்ச்சியாக குழப்பம் நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் உயர் நீதிமன்றம், புதுவை துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தது. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின் படிதான் அவர் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பு வெளியானது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவாகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.