கொரோனா தடுப்பு மருந்துகளான ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.
இதனையடுத்து மூன்றாவது தடுப்பு மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், தங்களது நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரைந்து அனுமதி அளிக்க, ஃபைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்தாண்டே அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய முதல் தடுப்பூசி நிறுவனமான ஃபைசர், தற்போது மீண்டும் ஒரு மாதத்திற்கு முன்பே தங்களது விண்ணப்பத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
இருப்பினும், ஃபைசர் தடுப்பு மருந்துக்கு இதுவரை அனுமதி கிடைக்காத சூழலிலும், 525 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப் பொருட்களை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போன்று, மாடர்னா நிறுவனமும் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் தற்போதுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தடுப்பூசிகளை வாங்குவது குறித்தும் அந்த இரண்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post