சேலத்தில் 5வது கொரோனா தொற்று ஆய்வகம்- மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் கண்டறியும் 5வது ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுவரை 333 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 27 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 741 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 4 ஆயிரத்து 253 பேர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version