மதுரை காந்தி மியூசிய பணியாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கும் வகையிலும், காந்தி மியூசியத்தை பராமரிக்கவும் நிரந்தர வைப்பு நிதியை அதிகரிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோ.புதூரை சேர்ந்த வடிவேலு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், வைப்பு நிதிக்கான வட்டி சதவீதம் குறைந்துள்ளதால், மதுரை காந்தி மியூசியத்துக்கான வைப்பு நிதி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பணியாளர்கள் போதிய சம்பளம் இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காந்தி மியூசியத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, அங்குள்ள பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவது போன்று, மதுரை காந்தி மியூசிய பணியாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கும் வகையிலும், காந்தி மியூசியத்தை பராமரிக்கவும் நிரந்தர வைப்பு நிதியை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், உரிய தகவல் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.