ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பில்லி சூனியத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, உடம்பு முழுவதும் சாக்கு மூலம் வேடமணிந்த பக்தர்கள், வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்…
கமுதி அருகே உள்ளது செங்கப்படை கிராமம். இந்த ஊரின் காவல் தெய்வமான அழகுவள்ளியம்மனுக்கு, வருடா வருடம் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அழகுவள்ளியம்மன் வேண்டியதை வழங்கும் தெய்வம் என நம்பப்படுவதால், இந்த ஊர்க்காரர்கள் வெளியூரில் வசித்தால் கூட, வருடத்திற்கு ஒரு முறை இந்த கோயிலுக்கு வந்து, பொங்கல் வைத்து, சாக்குப் பைகளை வைத்து வேடம் அணிந்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு சாக்கு வேடம் போடுபவர்கள், 10 நாட்களாக தீவிர விரதமிருந்து, காலை 9 மணியளவில் ஊரின் கண்மாய்கரை அருகே உள்ள பெருமாள் கோயில் திடலில் கூடுகின்றனர். அங்கு, ஏற்கெனவே பேண்ட் மற்றும் சட்டை வடிவில் தைத்து வைத்துள்ள சாக்குகளை அணிந்து கொண்டு, அதனுள் வைக்கோலை நெருக்கமாகத் திணித்துவிடுகின்றனர்.
பின்னர் முகத்தையும் சாக்கை வைத்து மூடி, முழுவதுமாக சாக்கு மனிதர்களாகவே மாறிவிட்டப்பின், மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றி வருகின்றனர். அவ்வாறு சாக்கு வேடம் அணிந்துகொண்டு நடனமாடி வருபவர்களை, தாரைத்தப்பட்டைகளோடு அழைத்துவரும் இளைஞர்கள், முளைப்பாரி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
பின் அங்கிருந்து கிளம்பும் முளைப்பாரி ஊர்வலத்தில், சாக்குவேடம் அணிந்தவர்கள் சிலம்பாட்டம் மற்றும் நடனம் ஆடிக்கொண்டே செல்கின்றனர். இந்த ஊர்வலமானது, முளைப்பாரி கிளம்பிய இடத்தில் இருந்து அழகுவள்ளியம்மன் கோயிலைச் சென்றடைகிறது.
இவ்வாறு சிரத்தையுடன் நேர்த்திக்கடன் செய்து முடித்தப் பின், அழகுவள்ளியம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது. இந்த வினோத வழிபாடு குறித்து பேசிய பக்தர்கள், இவ்வாறு சாக்கு அணிந்து வழிபாடு செய்து வந்தால், தங்களையும், தங்கள் குடும்பத்தையும், பில்லி, சூனியங்களில் இருந்து அழகுவள்ளியம்மன் காப்பதாக நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கொருமுறை நடைபெறும் இந்த வினோதமான வழிபாட்டைக்காண, கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஊர் மக்கள் ஏராளமானோர் செங்கப்படை கிராமத்தில் சங்கமிக்கின்றனர்.
Discussion about this post