தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டுக் கால கனவான, “காவிரி – குண்டாறு”” இணைப்பு திட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற இருக்கும் விழாவில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி, தெற்கு வெள்ளாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கும், 3 ஆயிரத்து 384 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் இரண்டாம் கட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகள் மற்றும் 42 ஆயிரத்து 170 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், இரண்டாவது கட்ட பணிகள் மூலம் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் பாசன நிலங்களும் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 33 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டப்படுகிறது. மொத்தமாக 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம், தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேறவுள்ளது.
Discussion about this post