காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 15-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவா பவன் கட்டடத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரள, கர்நாடக மாநிலங்களின் பிரதிநிதிகளும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி கர்நாடகம் ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரைக் காவிரி மேலாண்மை வாரியம் இறுதி செய்துள்ளது. அதன்படி கர்நாடகம் நீர் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகக் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.