தொழிலதிபர் மார்ட்டினின் மேலாளர் பழனிசாமியின் மறுபிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மார்ட்டினின் தொழில் நிறுவனங்கள் மற்றும் கோவையில் உள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை அடுத்து, மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்த பழனிசாமி என்பவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில், காரமடை அருகே குட்டை ஒன்றில் பழனிசாமி சடலாக மீட்கப்பட்டார்.
அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து, அவரது மனைவி மற்றும் மகன்கள், நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, மாஜிஸ்திரேட் ராமதாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பழனிசாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மாஜிஸ்திரேட் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில், சேலம் மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் மருத்துவ பேராசிரியர் குழு அமைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் பழனிசாமியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Discussion about this post