மத்தியப்பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து, ஜோதிராதித்ய சிந்தியா விலகியதால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பதவி விலகுவதாக அறிவித்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமா கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து, முதலமைச்சர் கமல்நாத் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் லால்ஜிடாண்டன் உத்தரவிட்டார். இதனால், முதலமைச்சர் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், கடந்த திங்கள்கிழமை, ஆளுநர் உரைக்குப் பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ்சிங் சவுஹான் மற்றும் 9 பாஜக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றபோது, முதலமைச்சர் கமல்நாத், சபாநாயகர் பிரஜாபதி, பேரவை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இன்று பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று காலை மீண்டும் விசாரணை நடைபெறும் இந்த வழக்கில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post