மே மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழாண்டு மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான மொத்த வசூல் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த வசூல் 94 ஆயிரத்து 16 கோடி ரூபாயாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூலான 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிகழாண்டு ஏப்ரலில் 72 புள்ளி 13 லட்சமாக இருந்த ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 72 புள்ளி 45 லட்சமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகையில், சிஜிஎஸ்டி 17 ஆயிரத்து 811 கோடி ரூபாயாகவும், எஸ்ஜிஎஸ்டி 24 ஆயிரத்து 462 கோடி ரூபாயாகவும், ஐஜிஎஸ்டி 49 ஆயிரத்து 891 கோடி ரூபாயாகவும், தீர்வை 8 ஆயிரத்து 125 கோடி ரூபாயாகவும் இருந்ததாக அந்த அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 18 ஆயிரத்து 934 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version