கரூரில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியின் தீவிர ஆதரவாளரும், காங்கிரஸ் வட்டார தலைவருமான அருணாச்சலம் என்பவரின் குத்தகை நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மைலம்பட்டி பகுதியை சார்ந்த நிஜாம் என்பவரிடமிருந்து விவசாய நிலத்தை காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியின் தீவிர ஆதரவாளரும், காங்கிரஸ் வட்டார தலைவருமான அருணாச்சலம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், குத்தகைக்கு எடுக்கப்பட்ட விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் கஞ்சா செடி பயிரிடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு வேலைபார்த்து வந்த முருகன் என்பவரையும், அருணாச்சலத்தின் மாமனார் தங்கவேலையும் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது குத்தகைதாரர் அருணாச்சலம் பெங்களூருவில் இருப்பதாக தெரிகிறது. பயிரிடப்பட்டுள்ள கஞ்சா செடிகள் சுமார் 250 கிலோ இருக்கும் என்றும், அதன் சந்தை மதிப்பு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் குத்தகைக்காக எடுக்கப்பட்ட நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post