தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளை தாண்டி நீடிக்கிறது. அவர்களின் நீர்ப் பாசனத் திட்டம் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
கம்போடியா கோயிலுக்கும், பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்கும் தான். ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் அங்கோர்வாட் நகரில் பத்து லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்கு தேவையான தண்ணீரும் விவசாயத்திற்கான நீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்லவர்கள் ஆட்சியின்போதும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மக்களுக்கான தேவைக்காகவும் விவசாயத்திற்காகவும் அதிகமான ஏரிகளும் குளங்களும் வெட்டப்பட்டன. பல்லவ மன்னர்கள் தாங்கள் அமைத்த ஏரிகளுக்கு ‘தடாகம்’ என்று பெயரிட்டனர். மன்னர்களின் பெயருக்கு பின்னால் தடாகம் என்று சேர்த்து பெயர் வைக்கும் வழக்கம் அப்போது புழக்கத்தில் இருந்திருக்கிறது.
பல்லவர்களுடன் தொடர்பு வைத்திருந்த கம்போடிய மன்னர்கள், தமிழகத்தில் உள்ள ஏரிகளைப்போல அமைக்க நினைத்தனர். அதனால் அவர்களும், ஏரிகளின் பெயரை ‘தடாகா’ என்று வைத்திருக்கின்றனர். கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் நகரில் மொத்தமாக நான்கு ஏரிகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு ஏரியின் பெயர் ‘இந்திர தடாகா’.
கம்போடிய மன்னன் இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதால் அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. அதன் பின்னர் யசோதர வர்மன் கட்டிய ஏரிக்கு ‘யசோதர தடாகா’ எனவும் பெயர்கள் வைக்கப்பட்டன. அதன் பிறகு ஜெய தடாகா என்று இரண்டு பெரிய ஏரிகளும் கட்டப்பட்டன. அவர்களுக்கான நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் பல்லவ மன்னர்கள்தான் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நீர் ஆதாரம் ‘டோன்லே சாப்’ ஏரி. இந்த ஏரி கடல்போலக் காட்சி அளிக்கும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரியாகும். 1997-ல் யுனெஸ்கோ இதை உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது. 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் இந்த ஏரியில் ஆயிரக்கணக்கணக்கான குடும்பங்கள் மிதக்கும் வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
வறண்ட காலத்தில் சுமார் 2,590 சதுர கிலோ மீட்டர் பரப்பையும், மழைக் காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியையொட்டிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இப்படி கம்போடியாவில் பல ஏரிகளைக் கட்டுவதற்கான முன்னோடியாக தமிழ்நாட்டு மன்னர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை என்கிறார்கள் ஆய்வாளர்கள்…
Discussion about this post