ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமில்லை என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி புதிய சிம் கார்டு பெறவும் வங்கி கணக்கு தொடங்கவும் பொது மக்கள் தாங்களாக முன் வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். ஆனால் இது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
இதனிடையே சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டமான உஜ்வாலா திட்டத்தையும் நீட்டித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வொரு இணைப்பிற்கும் ஆயிரத்து 600 ரூபாய் மானியமாக வழங்குகிறது. பயனாளிகள் இத்திட்டத்தில் சமையல் அடுப்பை மட்டும் வாங்கினால் போதும். இதையும் மாத தவனை முறையில் செலுத்தலாம். மாற்று சிலிண்டருக்கான செலவை பயனாளிகளே ஏற்க வேண்டும்.