இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். நாங்குநேரியில், 229 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பொருட்களை அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று, புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Discussion about this post