வரும் 2022க்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல் விளை கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செப்டம்பர் 6ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக சிவன் கூறினார்.
அடுத்த ஆண்டு முதல்பாதியில் சூரியனை ஆராயும்வகையில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்படவுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் சூரியன் குறித்த பல தகவல்கள் தெரியவரும் என்று கூறினார். நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 108 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த சிறப்பு பயிற்சியை இஸ்ரோ வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்று உள்ளதாக கூறிய சிவன், வரும் 2022க்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும் என தெரிவித்தார்.