வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டடங்களுக்கு பின்னால், வியர்வை சிந்திய உழைப்பாளர்களின் முயற்சி முன்னிற்கும்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு செங்கல் தொழிலாளர்கள் குறித்த செய்தி தொகுப்பை இப்போது காணலாம்..
கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று சொல்லுவார்கள். அந்த வகையில் கடின உழைப்புக்கு பறைச்சாற்றும் ஒரு தொழிலாக இருப்பது செங்கல் தயாரிப்பு. அரியலூர் மாவட்டம் அடுத்த தா.பழூர் ஒன்றியத்தில் கொள்ளிடக்கரையை ஒட்டியுள்ள அண்ணகாரன்பேட்டை, வாழைக்குறிச்சி, மேலக்குடிகாடு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கற்கள் தயாரிக்கும் தொழில் நடைபெறுகிறது. வெயில், மழை பாராது உழைப்பை மூலதனமாக்குவது இவர்களின் அன்றாட பணி. தங்களது உடலை வருத்தி, குடும்பத்தோடு உழைத்தால் தான் ஓரளவு வருமானம் பெறலாம் என்ற நிலை இருப்பதாக கூறுகின்றனர்.
முன்பெல்லாம் குடும்பத்தோடு இந்த தொழிலை செய்யும் போது குழந்தைகளும் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழக அரசின் கடும் முயற்சியால் இப்போது குழந்தைகள் படிக்க சென்று விட்டார்கள். இன்றைக்கு சிமெண்ட்டில் தயாராகும் கற்கள் தலை தூக்கினாலும், செங்கற்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. காரணம் கட்டிடம் பலமாக நிற்க உதவுவது, வெப்பத்தில் குளிர்ச்சி தருவது, குளிர்ச்சியில் வெப்பத்தை தருவது என செங்கற்களின் பலன்கள் அதிகம். இத்தொழிலில் முக்கிய பிரச்சினையாக இருப்பது மணல் தட்டுப்பாடு. மணல் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இத்தொழிலை இன்னும் மேம்படுத்த முடியும் என்கிறார்கள் இவர்கள்.
செங்கல் தயாரிக்கும் இடங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள்தான் அதிகம். கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு செங்கல் தயாரிப்பில் பலர் சொந்தமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உழைப்பால் தான் இன்றும் தங்கு தடையின்றி பாரம்பரிய செங்கல் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post