செக் குடியரசு நாட்டில், 15 வார கர்ப்பமாக இருந்தபோது மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு, அதிநவீன மருத்துவ சிகிச்சையின் உதவியால் 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 15 வார கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டநிலையில், அவரது வயிற்றில் வளரும் சிசுவை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு செயற்கை உபகரணங்களுடன் அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரசவத்திற்கு உதவும் வகையில், இயந்திர வசதிகள் கொண்டு அப்பெண்ணின் கால்களுக்கு நடை பயிற்சி உள்ளிட்டவையும் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் 117 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் 2 கிலோ 13 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை அப்பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பிறந்ததையடுத்து அப்பெண் இயற்கையாக மரணம் அடையும் வகையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
Discussion about this post