இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. தீவிரவாத தாக்குதலையடுத்து ராணுவ செயலர் ஹேமா ஸ்ரீ பெர்னான்டோ, காவல் துறை ஆணையர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த 4ம் தேதி உளவுத் துறை குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளித்துள்ளது. ஆனால் இந்த தகவல்களை முறையாக அதிபர் மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாலை 4 மணியளவில், இலங்கையிலுள்ள மத அமைப்புகளுடன், தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கையாள்வது குறித்து ஆலோசனை நடக்கவுள்ளதாக இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post