மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் தொடர்ந்து சிக்கல் நீட்டிப்பதால் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி இடையே ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியில் தொடருவார் என்று ஏற்கனவே பாஜக தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆட்சியில் சரிபாதி பங்கு, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக உள்ளது.
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் முன்பு, உத்தவ் தாக்கரேயுடன் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷாவும் விரும்புகிறார். இந்த பரபரப்பான சூழலில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட சிவசேனா எம்.எல்.ஏக்களின் கூட்டம் மும்பையின் இன்று நடைபெறவுள்ளது. முதல்வர் பதவி, ஆட்சியில் சரிபாதி பங்கு உள்ளிட்ட விஷயங்களில் அப்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க தாங்கள் தயாராக இல்லை என்பதை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post