சென்னையின் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் சென்னை விமானநிலையத்தில் 4 புறாக்கள் புகுந்து ஏசி குளிர்காற்றை சுகமாக அனுபவித்து வருகின்றன. அவற்றை அங்கிருந்து விரட்ட முயற்சிக்கும் விமானநிலைய ஊழியர்களுக்கு அவை சவாலாக உள்ளன.
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், பயணிகள் புறப்பாடு பகுதிக்குள் 4 புறாக்கள் புகுந்துள்ளன. கொளுத்தும் வெயிலில் ஏசி குளிர்காற்றை அனுபவித்தும், அங்குள்ள குப்பைக்கூடைகளில் பயணிகள் வீசி செல்லும் உணவுகளை சாப்பிட்டும் இவை வெளியில் செல்ல விருப்பமில்லாமல் அங்கேயே சுற்றித் திரிகின்றன.
புறாக்களால் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாதபோதிலும், விமான பாதுகாப்பு சட்டவிதிகளின்படி விமான நிலையத்திற்குள் எந்த பறவையும் இருக்கக்கூடாது என்பதால், இவற்றை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில், புறாக்கள், அங்கேயே உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலையிலிருந்து புறாக்களுக்கு துணையாக 2 காகங்களும் உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்குள் சுற்றித் திரிகின்றன. இவற்றை வெளியேற்றும் ஊழியர்களின் முயற்சி பலிக்கவில்லை என்றால் வனத்துறையினர் உதவியை அவர்கள் நாடுவார்கள்.
Discussion about this post