சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கான, சூழலுக்கு உகந்த பைகளை, 2021 ஜனவரி முதல் சானிட்டரி நாப்கின்களோடு சேர்த்து கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, புனேவில் சுகாதாரப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மக்கும் வகையிலான சானிட்டரி நாப்கின்களை அகற்றும் பைகளை நாப்கின்களோடு சேர்த்து வழங்கவேண்டும் என்று, சானிட்டரி நாப்கின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் அதனை வழங்குவது இல்லை என்று தெரிகிறது. வரும் ஜனவரி 2021 முதல் நாப்கின்களோடு அவற்றை அப்புறப்படுத்துவதற்கான பைகளை சேர்த்து வழங்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் , 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு நகராட்சி பகுதிகளில் உள்ள தூய்மை நெறிமுறைகள் தற்போது பொருந்தும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post