அயோத்தியில் நடைபெற்ற கோலாகல விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் திங்கள் கிழமை காலை கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கின. இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றடைந்தார். பிரதமர் மோடியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். ராமரை தரிசிக்கும் முன் அனுமனிடம் அனுமதி பெற வேண்டும் என்பது ஐதீகம் என்பதால், முதல் நிகழ்ச்சியாக, அயோத்தியில் உள்ள அனுமன்ஹார்கி கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
பின்னர் குழந்தை ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின்னர் கோயில் வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றை அவர் நட்டு வைத்தார். கோயில் வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் பங்கேற்றார். அவருடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் கோபால் தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 40 கிலோ வெள்ளி செங்கல்லை வைத்து ராமர் கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பூமி பூஜை விழாவில் 175 முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமையும் ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. இதற்காக 2 ஆயிரம் கோயில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் பயன்படுத்தப்படுகிறது. 30 ஆண்டுகளாக சேமித்த 2 லட்சம் கற்களை கொண்டு கட்டுமான பணி நடைபெறுகிறது. மூன்றரை ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post