எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான பாரதி கிருஷ்ணகுமார் கவிச் சக்கரவர்த்தியின் பணிவு என்ற தலைப்பில் நூல் ஒன்றை நாளை வெளியிடவுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கம்பகவிச்சக்கரவர்த்தி கம்பன் தான் இயற்றிய இராமாவதாரம் (இராமாயணம்) எனுங் காப்பியத்தில் பல்வேறு பாத்திரங்களின் குண நலங்களைத் தன் தீந்தமிழால் விருத்தத்தில் வார்த்துத் தந்திருக்கிறான். தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான்.
அவனின் இராமாயணம் பல நூறு ஆண்டுகளாக வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், காப்பியத்தை இயற்றி, அரங்கேற்றம் செய்ய அவனுக்கு நேர்ந்த “பாடுகளை” ஒரு ஆறு விருத்தப்பாக்களில் தந்திருக்கிறான். அதை ஏனோ தமிழ் உலகம் எண்ணூறு ஆண்டுகளாகக் கண்டு கொள்ளாமலேயே கடந்து போயிருக்கிறது.
ஆனால்,பிறரின் “பாடுகளைத் ” தன்பாடுகளாக எண்ணும் படைப்புக் கலைஞன் “பாரதி கிருஷ்ணகுமார்” கம்பனின் மன உணர்வுகளை அவன் இயற்றிய கவிதையின் வழியாகவே கண்டு… அது குறித்துப் பல நூல்களை வாசித்து தான் கண்டடைந்த உண்மைகளை நம்முன் ஒரு நூல் வடிவில் தந்திருக்கிறார். அதன் தலைப்பு “கவிச் சக்கரவர்த்தியின் பணிவு“. தமிழையும் கம்பனையும் விரும்புபவர்கள் அந்நூலையும் விரும்புவார்கள் என்பது எனது முடிபு.
கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் மாதாந்திரக் கூட்டம்
நாளை அந்நூல் ராஜபாளையம் கம்பன் கழகத்தில் அரங்கேற்றம் ஆகிறது. இதுவரை எல்லாக் கம்பன் கழகங்களிலும் இராமாயணம் அரங்கேறியிருக்கிறது. ஆனால்,இது முற்றிலும் புதிய அரங்கேற்றம். ஆம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பனைக் கம்பன் கழகத்தில் அரங்கேற்றுகிறான் ஒரு பாரதி உபாசகன்.
அந்த நூலுக்கு அட்டைப்பட வடிவமைப்புச் செய்யும் அரும்பணியை எனக்குத் தந்து என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். இந்நூலுக்காக கம்பனை வண்ணத்தில் வரைந்திருக்கிறேன்.
வாய்ப்பளித்த “பாரதி”க்கும், “கம்பனுக்கும்” ஓராயிரம் நன்றி என்று தெரிவித்துள்ளார்.