ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

தற்கால தமிழ் இலக்கிய உலகில் விஷ்ணுபுரம் விருது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற விருதாக பார்க்கப்படுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளரும், கறார் விமர்சகருமான ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலையொட்டி உருவாக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம். அவர்கள் ஆண்டுதோறும் மூத்த படைப்பாளிகளை கவுரவப்படுத்தும் வண்ணம் விருதுகளை வழங்கி வருகின்றனர். 
 
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கிய ஆய்வாளரும், நாவலாசிரியருமான பேராசியரிர் ராஜ் கௌதமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம் கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். 
 
சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவை ராஜ், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராஷஸ், பொய் + அபத்தம் = உண்மை, கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக, தமிழ் சமூகத்தில் அறமும், ஆற்றலும், பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு, ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ் சமூக மாற்றமும், பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார். 
 
இதுவரை விஷ்ணுபுரம் விருதானது மூத்த படைப்பாளிகளான ஆ.மாதவன். பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன்,  வண்ணதாசன், சீ.முத்துசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
ராஜ் கௌதமனுக்கு தமிழிலக்கிய மரபில் உள்ள இடம் என்பது அவர் தமிழிலக்கிய மரபை வகுத்தளித்த ஆய்வாளர்களில் முதன்மையான மூவரில் ஒருவர் என்பதே என்று எழுத்தாளர் ஜெயமோகன் ராஜ் கௌதமன் குறித்து செய்துள்ள வரையறை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 
Exit mobile version