தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை-யை காவல்துறையினர் கைது செய்தனர்…
தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா என்ற 16 வயது மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் மரிய ஐஸ்வர்யா 2 நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் பள்ளிக்கு சென்ற மரிய ஐஸ்வர்யாவை ஞானபிரகாசம் என்ற ஆசிரியர், மாணவர்கள் முன்னிலையில் 150 தோப்புகரணம் போடச் சொல்லியும், பள்ளியை ஒருமுறை சுற்றி வரும்படியும் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் ஒழுங்காக பள்ளிக்கு வரவில்லை என்றால் தேர்வு எழுத முடியாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மரிய ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வரும் கனகரத்தினமணியை தற்கொலைக்கு தூண்டுதல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ஞானபிரகாசத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Discussion about this post