தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர், கருப்பின விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்த தினமான ஜூலை 18தான் உலகெங்கும் மண்டேலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. சாமானியனாகப் பிறந்து சரித்திரமாக உயர்ந்த மண்டேலாவின் வாழ்க்கை கண்ணீராலும் ரத்தத்தாலும் எழுதப்பட்ட ஒன்று.
1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு என்ற கிராமத்தில் பிறந்தார். தனது குடும்பத்தில் இருந்து பள்ளி சென்ற முதல் நபரே இவர்தான். இவரது முழுப் பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. இதில் நெல்சன் என்ற பெயர் இவரது ஆரம்பப் பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டது.
ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டே பள்ளிப் படிப்பை முடித்த மண்டேலா, கட்டுடல் கொண்ட குத்துச் சண்டை வீரராகவும் விளங்கினார். பின்னர் தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றிய படியே கலூரியில் சட்டமும் படித்தார்.
தனது இளமைக் காலத்தில் ‘ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ்’ இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய நெல்சன் மண்டேலாவின் வ்ழிகாட்டி நமது தேசப்பிதா காந்தியடிகள்தான். அன்றைய நிறவெறி கொண்ட தென்னாப்பிரிக்க அரசு மண்டேலா சார்ந்திருந்த இயக்கத்தை தடை செய்தது. 17 மாத தேடுதல் வேட்டையின் முடிவில் 1962ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 27 ஆண்டுகள் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல சித்திரவதைகள் இழைக்கப்பட்டன. அவரது கட்டுடல் அடித்து நொறுக்கப்பட்டது, நீருக்கு பதில் சிறுநீர் அளிக்கப்பட்டது, தனது மனைவி உட்பட யாரையும் அவரால் சந்திக்க முடியவில்லை. 1988ல் கடுமையான காசநோயும் அவரைத் தாக்க மரணத்தின் விளிம்புக்குச் சென்று நூலிழையில் மீண்டார் மண்டேலா.
வெளியுலகத்தை மண்டேலாவால் காணமுடியாத நிலையில், உலகம் மண்டேலாவைக் கண்டு கொண்டது. வரலாறு காணாத நீண்ட சிறைவாசம் மண்டேலாவை தென்னாப்பிரிக்க மக்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கே ஒரு மாபெரும் தலைவராக்கியது. உலகநாடுகள் நிரவெறி கொண்ட தென்னாப்பிரிக்க அரசு மீது தடைகளை விதித்தன, கண்டனங்களும் குவிந்தது. இந்நிலையில் 1990 பிப்ரவரி 11 அன்று அன்றைய தென்னாப்பிரிக்க அதிபர் வில்லியம் டெக்ளார் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, நெல்சன் மண்டேலாவின் விடுதலையை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 71 வயதான மண்டேலா 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையானார். அந்தக் காட்சி உலகெங்கும் ஒளிபரப்பு செய்யப்பட்டது, பார்த்தவர்களின் இதயங்கள் உருகின.
விடுதலைக்குப் பின்னர் தென்னாப்பிரிக்க அரசிடம் பேசி கருப்பின மக்களின் பங்களிப்போடு மக்களாட்சி அமையவும், நிர வெறி ஒழிக்கப்படவும் பல்வேறு சட்டங்களை மண்டேலா கொண்டுவந்தார். இதனால் 1993ல் அவர் நோபல் பரிசும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து 1994 ஏப்ரலில் நடந்த தேர்தலில் தென்னாப்பிரிக்க மக்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று மண்டேலாவைத் தங்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். 1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபர் ஆனார். தனது ஆட்சிக் காலத்தில் ‘இனி தென்னாப்பிரிக்க அரசு எந்த வழியில் செல்ல வேண்டும்?’ – என்பதை தெளிவாக்கிய அவர், 1999ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.
அதிபராக இருந்த போது 1998-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளை கற்றுக் கொடுக்க அவர் உத்தரவிட்டது இந்தியர்களின் மனதில் மண்டேலாவுக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்தது.
அதிபர் பதவியில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி இருந்த போதும் தென்னாப்பிரிக்காவின் அடையாளமாகவே மண்டேலா பார்க்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் அதுவரை ஆப்ரிக்க கண்டத்தில் நடக்காத கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடக்க அவரே காரணமாக இருந்தார்.
வயோதிகத்தால் 2013ஆம் ஆண்டு முதல் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மண்டேலா 2013ஆம் ஆண்டில் தனது 95ஆம் வயதில் நம்மை விட்டு மறைந்தார்.
இனிமையாக பழகக் கூடியவர், நாகரிக ஆடைகளை அணிந்தாலும் எளிமையைக் கைவிடாதவர், தன்னைத் தானே கிண்டல் செய்யும் அளவுக்கு ஜனநாயகவாதி, வைரத்தின் உறுதியை தனது எண்ணங்களில் வெளிப்படுத்தியவர், தான் அதிபரான பின்னும் தன்னை சிறையில் அடித்து நொறுக்கியவர்களை அவமரியாதை கூட செய்யாதவர், வாழ்வின் 67 ஆண்டுகளை மக்களுக்கு அர்பணித்தவர் – எனப் பல பெருமைகள் மண்டேலாவுக்கு உண்டு.
இத்தனையையும் மனதில் வைத்தே ஐ.நா.சபை மண்டேலாவின் பிறந்த நாளை ’நெல்சன் மண்டேலா சர்வதேச தின’மாக 2009ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்த நாளில் உலக மக்கள் அனைவரும் மண்டேலா பொது வாழ்க்கையில் கழித்த 67 ஆண்டுகளைக் குறிக்கும் படியாக குறைந்தது 67 நிமிடங்கள் சமூக சேவைக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நமது 67 நிமிடங்களை நாம் ஒதுக்குவோமா?
Discussion about this post