காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரத்தில் பட்டாக் கத்தியுடன் வந்த கஞ்சா கும்பல் ஊரையே சூறையாடியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் கோவிந்தவாடி அகரம் உள்ளது. இங்கு கஞ்சா போதைக்கு அடிமையாகி முக்கியப் புள்ளியாக வலம் வந்தவர் புருஷோத்தமன். இவனுடைய ஆதரவாளர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி இவனுடன் வழிப்பறி, செயின் பறிப்பு பாலியல் சீண்டல், ரௌடியிசம் போன்றவற்றை செய்து வருகின்றனர். புருஷோத்தமன் மீது காவலரை அரிவாளால் தாக்கிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ரவுடி புருஷோத்தமன்னுக்கும் கோவிந்தவாடி அகரத்தில் முக்கிய புள்ளியாக உள்ள சஞ்சீவிராயன் என்பருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சீவிராயன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று புருஷோத்தமன் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
மீண்டும் நேற்று காலை 10.30 மணியளவில் முகமூடி அணிந்து கொண்டு புருஷோத்தமன் மற்றும் அவனுடைய ஆட்கள் கோவிந்தவாடி அகரம் ஊருக்குள் பட்டாக்கத்தியுடன் சஞ்சீவிராயன் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சஞ்சீவிராயன் தம்பியான தனஞ்செழியன் தட்டிக் கேட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்த ரவுடி புருஷோத்தமன் மற்றும் கூட்டாளிகள் தனஞ்செழியன் மற்றும் உடன் வந்தவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் கழுத்தில் வெட்டுப்பட்ட தனஞ்செழியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதில் சஞ்சீவிராயன் , மனைவி ராதா , மகன்கள் தட்சிணாமூர்த்தி, யதேந்திரன், உறவினர்கள் சுபாஷினி, தேவகி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் உயிரிழந்த தனஞ்செழியன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனஞ்செழியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்
1. புருஷோத்தமன்
2. சுதாகர்
3. விஜயகுமார்
4. பிரபு
5. லோகேஷ்
6. விஜய்
7. ராஜா
8. தியாகராஜன்
9. விக்கி
10. சரத்குமார்
ஆகிய குற்றவாளிகளை காஞ்சிபுரம் தனிப்படை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை இணைந்து 10 குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தால் கோவிந்தவாடி அகரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post