கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பொதுமக்களிடம் வழக்கமாக இருக்கும் உற்சாகம் காணப்படவில்லை. பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேரில் சென்று தரிசிக்க அனுமதி வழங்கபடாத நிலையில், கோயில்களில் வழிபாடு நடத்த பல்வேறு கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள தெக்டி கணபதி கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசிக்கின்றனர்.
டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், கோயில்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபடவும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரோஜினி நகர் பகுதியில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மும்பை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பொதுமக்கள் இல்லங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுகின்றனர். விநாயகர் சிலை, பூஜை பொருட்களை பெறுவதற்காக தாதர் சந்தையில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூடினர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தாதர் சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் அப்பகுதி கடும் நெரிசலாக காணப்பட்டது.
Discussion about this post