உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் இ சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று வானொலியில் பேசிய பிரதமர் மோடி, பாடகி லதா மங்கேஷ்கரின் தொண்ணூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நவராத்திரி, தீபாவளி ஆகிய விழாக்காலங்கள், நமக்கு எழுச்சியையும், புத்துணர்வையும் தருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெண்களின் திறமையையும் ஆற்றலையும் போற்றும் வகையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இனிப்புகளையும் பரிசுப் பொருட்களையும் பிறருக்கு வழங்கி விழாக்களைக் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்தார். செல்வத்தின் கடவுளாக லட்சுமியை வழிபட்டு வரும் நாம், பெண் பிள்ளைகளை லட்சுமியாகக் கருத வேண்டும் எனவும், இதற்காக ஊர்தோறும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புகையிலைப் பொருட்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது பற்றிப் போதிய விழிப்புணர்வு உள்ளதாகவும், அதேநேரத்தில் இ சிகரெட் பற்றி விழிப்புணர்வு குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். இ சிகரெட்களும் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே அவற்றைத் தடை செய்ததாகக் குறிப்பிட்டார்.
Discussion about this post