இந்திய சினிமாக்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பயணிக்கின்ற பதையில் இருந்து தடம் மாறும்.அதற்கு காரணம் துடிப்புமிக்க வரவுகள். அப்படித்தான் 70’களின் பிற்பாதியில் தமிழ் சினிமா என்னும் கற்பனை உலகத்தை, கலை உலகமாக மாற்ற முயன்றவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. இந்திய சினிமாவின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், டப்பிங் கலைஞர், நடிகர் என பல முகங்களை கொண்ட அந்த செல்லூலாய்ட் கலைஞர் பிறந்த தினம் இன்று.
அதுவரை எடுக்கப்பட்ட சினிமாக்களின் வரையறையை உடைத்து யதார்த்தமான கதையை சொல்லி அதில் குறைவான முகங்களை வைத்து நிறைவான நடிப்பையும், தினசரி நாம் கடக்கும் வாழ்வியலையும் சொல்ல முயன்றவர்களில் முதன்மையானவர்.
மே 20, 1939ல் இலங்கை மட்டக்களப்பில் பிறந்த பாலுமகேந்திராவின் இயற்பெயர் மகேந்திரா. லண்டனில் இளநிலை படிப்பை முடித்த கையோடு பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத்துறையில் 1969ல் தங்கம் வென்றார்.
இந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் வர ஈர்த்த ஒரு விஷயம் என்னவென்றால், “bridge of river kwai” என்ற படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. அப்போதே முடிவெடுத்தார் சினிமா தான் தனக்கான உலகம் என்று.
1971ல் “நெல்லு” என்ற மலையாளப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திற்கு அம்மாநில அரசின் “சிறந்த ஒளிப்பதிவாளர்” விருதுப் பெற்றார். இதன்பிறகு அடுத்த 6 ஆண்டுகளுக்கு பல படங்களுக்கு ஒளிப்பதிவு மட்டுமே செய்தார். ஆனால் அதில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டார். அதிகமாக இயற்கை யின் ஒளிகளை மட்டுமே பயன்படுத்தினார்.
சினிமாவின் அடையாளம் வெளிச்சம் என்றால், இருள் தான் அதன் ஆன்மா என்பார் பாலுமகேந்திரா. அவரின் இந்த கேமரா நுணுக்கங்கள் எவருக்குமே இன்றுவரை புரியாத புதிர்.
1977ல் இயக்குநராக கன்னடத்தில் “கோகிலா” படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை அவரது கைகளில் பெற்றுத் தந்தது. அதே ஆண்டு தான் தமிழில் ஒளிப்பதிவு செய்த இயக்குநர் மகேந்திரனின் கிளாசிக் படமான “முள்ளும் மலரும்” படமும் வெளியானது.
1979ல் தமிழில் “அழியாத கோலங்கள்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில் நடித்த மறைந்த நடிகை ஷோபாவை இன்றளவும் மறக்க தமிழ் சினிமா ரசிகர்களாலும், தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவால் கூட முடியாது.
1980ல் மூடுபனி வெளியானது. இந்த படம் தொடங்கி கடைசியாக அவர் இயக்கி நடித்த “தலைமுறைகள்” படம் வரை இளையராஜாவோடு தான் பயணித்தார் பாலு மகேந்திரா.
1982ல் கமல், ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான “மூன்றாம் பிறை” படம் வெளியாகி கமலுக்கு நடிப்புக்காகவும், இவருக்கு ஒளிப்பதிவுக்காக என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. கவியரசர் கண்ணதாசனின் கடைசிப்பாடலான “கண்ணே கலைமானே” இடம் பெற்ற திரைப்படம். இதன் கிளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவின் எவர் கிரீன் கிளைமாக்ஸ். இங்கே இப்படி என்றால் இந்தியில் எடுக்கப்பட்ட இதன் ரீமேக் “சாத்மா” தோல்வியடைந்தது. இதனால் பாலுமகேந்திராவிற்கு கமர்ஷியல் படங்கள் எடுக்கத் தெரியாது என்ற கருத்து பதிவானது.
இதன்பின் மலையாள உலகிற்கு சென்ற பாலுமகேந்திரா இயக்கத்தில் “ஓளங்கள்” படம் வெளியானது.
1984ல் ரசிகர்களுக்காக “நீங்கள் கேட்டவை” படம் எடுத்தார். இயக்குநராக ரஜினியுடன் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படம் மூலம் கைக்கோர்த்தார். “ரெட்டை வால் குருவி” மூலம் வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கினார். இதில் இடம் பெற்ற “ராஜ ராஜ சோழன் நான்” பாடல் டாப் மெலடிகளில் ஒன்று.
1988ல் அவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத படமான “வீடு” வெளியானது. இதில் இடம்பெற்ற சுதா, சொக்கலிங்கம் தாத்தா கேரக்டர்களை இன்றளவும் மறக்க முடியாது. இந்த படம் சிறந்த நடிகை, சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதுகளை வென்று இன்றும் படம் இயக்க வருபவர்களுக்கு பாடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
1989ல் சிறந்த குடும்ப திரைப்படத்திற்காக தேசிய விருதை “சந்தியா ராகம்” திரைப்படம் மீண்டும் வாங்கி கொடுத்தது.
1992ல் வெளியான “வண்ண வண்ண பூக்கள்”படத்திற்காக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் பாலுமகேந்திரா.
1993ல் “மறுபடியும்”,1995ல் “சதிலீலாவதி” என வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா. 1997ல் “ராமன் அப்துல்லா” என்கிற வேற்று மதங்களை சார்ந்த ஆள்மாறாட்ட கதையை இயக்கியிருப்பார். 2003ல் ஸ்டீபன் ஹாக்கினின் மிசரி நாவலைத் தழுவி “ஜூலி கணபதி” படத்தை எடுத்தார். 2005ல் தனுஷை வைத்து “அது ஒரு கனாக்காலம்” படமும், அதனை தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து கடைசியாக “தலைமுறைகள்” என பல தலைமுறைக்கும் சேர்த்து ஒரு படமெடுத்தார். அதுதான் “பாலுமகேந்திரா”.
இத்தனை படங்களால் ரசிகர்களின் மனதை நிறைத்த பாலுவால் அவரது மனதை நிறைவாக்கி கொள்ள முடியவில்லை. தான் பிறந்த ஈழம் குறித்தும், நடிகர் சிவாஜியை வைத்து ஒரு படமும் எடுக்க அவர் விரும்பினார். ஆனால் அது நடக்கவேயில்லை.
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித்ரேயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளராக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது கேமராவை பரிசாக வழங்கியுள்ளார்.
அவர் எப்போதும் ஒரு விஷயத்தை நினைவுக் கூறுவார். “படைப்பாளிகளுக்கு நுண்ணுணர்வு அவசியம். அது இல்லையென்றால் அவன் படைப்பாளியே இல்லை”என்பது தான். மற்றவர்களிடம் வெளிப்படாத விஷயங்கள் உன்னிடம் வெளிப்படுகிறதென்றால் உன்னிடம் நுண்ணுணர்வு இருக்கிறதென்று தானே அர்த்தம். ஆம்..அது பாலுமகேந்திராவின் படங்களில் முழுக்க வெளிப்படும். அவர் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சினிமாவில் நிஜமாகவே காட்ட விரும்பினார். அவரின் பல படங்களில் அவரின் நிஜ வாழ்வின் சம்பவங்களே காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும்.
அதனால் தான் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் எந்நேரமும் இருந்துக் கொண்டேயிருந்தது. தன் வாழ்நாளில் பல மொழிகளில் இதுவரை 30க்கும் குறைவான படங்களை இயக்கினாலும் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் படிமங்கள். தனியார் தொலைக்காட்சிக்காக “கதை நேரம்” என்கிற தொடரையும் இயக்கியுள்ளார். தேசிய விருதுகள், மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் என பல விருதுகள் இவரை கவுரவித்தன.
இன்றைக்கு தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களாக வலம் வரும் பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி, சசிகுமார்என பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள் என்பதை தங்களது யதார்த்த படைப்புகள் மூலம் வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
பிலிம் கேமராவில் நான் ஹீரோ என்றால், டிஜிட்டல் கேமராவில் நான் ஜீரோ என்பார். நல்ல கேமரா என்றும் நல்ல படத்தை தராது. நல்ல படைப்பாளியால் தான் நல்ல படத்தை தர முடியும் என சொல்வார். உண்மைதான். அப்படியான படைப்பாளிகள் தான் வாழ்நாள் முழுவதும் கொண்டாடப்படுவார்கள். எந்தவித சமரசமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் தனக்கான பாதையை சரியாக வகுப்பார்கள் என்பதற்கு உதாரணம் பாலுமகேந்திரா.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பாலுமகேந்திரா…!
Discussion about this post