கடந்த ஓராண்டில் அமேசான் காடுகள் சந்தித்த அழிவை விடவும் மோசமான அழிவை, கடந்த ஒரு மாதத்தில் அமேசான் காடுகள் சந்தித்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாகக் காண்போம்.
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் பரப்பளவில் வெறும் 6 சதவிகிதத்தைக் கொண்டிருந்தாலும், உலகின் உயிரின வகைகளில் 50% உயிரினங்களின் வாழிடமாகத் திகழ்கின்றது.
பிரேசிலின் புதிய அதிபராக பொல்சனாரோ பதவியேற்ற பின்னர், பிரேசிலின் பொருளாதார வளர்ச்சிக்காக அமேசானை அழிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவித்தார். இவரது ஆட்சியில் அமேசானில் தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவற்றின் உச்சமாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த தீ விபத்தின் பின்னரும் கூட பிரேசில் நாடு தொடர்ந்து அமேசான் காடுகளை அழித்து வருகின்றது. பிரேசிலின் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு அமேசானில் வாழும் பழங்குடி மக்களும், வன உயிரின ஆர்வலர்களும், சூழலியல் வல்லுநர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரேசில் அதிபர் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அங்கு அமேசான் அழிப்பு நடவடிக்கைகள் உச்சபட்ச வேகத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது, கடந்த 2019ஆம் ஆண்டில் அமேசானில் நடந்த ஒட்டுமொத்த காடழிப்பு நடவடிக்கைகளைவிடவும், அதிகமான காடழிப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பிரேசிலில் நடந்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் – என்ற ஆய்வு அமைப்பின் அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்று உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அமேசான் மழைக்காடுகளின் சுமார் 280 சதுர கிலோ மீட்டர் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்தக் காடழிப்பை விடவும் அதிகம் என்றும் அந்த ஆய்வின் தரவுகள் கூறுகின்றன.
ஏற்கனவே உலக வெப்பமயமாதலால் மிக அதிக வெப்பமயமான கோடைக்காலங்கள் உருவாகி உள்ளன. துருவப் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இந்நிலையில் அமேசான் காடுகளும் அழிக்கப்படும் போது, அதன் விளைவுகள் இன்னும் மோசமானவையாக இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
Discussion about this post