மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நாளை மறுநாள் முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
2020-21-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின், கடந்த சனிக்கிழமை மண்டல பூஜை நடந்தது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 19-ந் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், 20-ந் தேதி காலை 6 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு, கோயில் நடை அடைக்கப்பட்டுகிறது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இம்முறை நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை நடைபெறாது என்று கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Discussion about this post