நாட்டையே உலுக்கிய அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதின்றம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இருந்தபோதிலும், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி கடந்த டிசம்பர் வரை 11 மாதங்கள் நடைபெற்றது.
வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்தநிலையில், மீதமுள்ள 16 பேரில் குணசேகரன் என்ற தோட்டக்காரன் குற்றவாளி இல்லை என்றும், மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள் என்றும் சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதின்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Discussion about this post