‘அவாஸ்ட் ஆண்டி வைரஸ்’ என்ற சாப்ட்வேர், பயனாளர்களின் விபரங்களை, பல கோடி ரூபாய்க்கு, தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
அவாஸ்ட் ஆண்டி வைரஸ் என்பது, கம்ப்யூட்டர்களை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பயன்படும் ஒரு சாப்ட்வேர். ‘ஆண்ட்டி வைரஸ்’ என்ற பயன்பாட்டுக்கு, பெரும்பாலோனோர், அவாஸ்ட் ஆண்டி வைரஸ் சாப்ட்வேரைத்தான் பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இந்நிலையில், பி.சி மேக் என்ற மதர்போர்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ், அதன் பயனாளர்களின், பிரவுசிங் ஹிஸ்டரி டேட்டாக்களை, தனியார் இணையதள நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. அவாஸ்ட் ஆண்டி வைரஸ் நிறுவனத்திடம் இருந்து, பயனாளர் விபரங்களைப் பெறும் இணையத்தள நிறுவனங்கள், அவற்றை தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கோடிகளை ஈட்டுகின்றன.
இந்த வர்த்தகத்தை, அவாஸ்ட் ஆண்டி வைரஸ், அதன் துணை நிறுவனமான ஜம்ப்சாட் (JUMPSHOT) மூலம் செய்து வருவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுபோல், பிரபல இணையதள நிறுவனங்களான கூகுள், மோஸில்லா பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள், அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து பயனாளர்களின் டேட்டாக்களை அதிக விலைக்கு வாங்கி உள்ளதும் அம்பலமாகி உள்ளது. இப்படி வாங்கும் டேட்டாக்களை, உலகம் முழுவதும் உள்ள விளம்பர-வர்த்தக நிறுவனங்களுக்கு அவை விற்பனை செய்துள்ளன.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், தங்கள் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும்போது, Terms and condition- பகுதியில், அது குறித்த அனுமதி கேட்கப்படுகிறது என்பது அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் தரப்பு வாதமாக உள்ளது. ஆனால், terms and condition பகுதியில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு, நாம் அனுமதி வழங்கும் போது மட்டுமே, அவாஸ்ட் சேவையை முழுமையாகவும் நிறைவாகவும் பயன்படுத்த முடியும் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.
கடந்த 2019-ஆம் ஆண்டில், இப்படிப் பெறப்பட்ட டேட்டாக்களை உள்ளடக்கிய ஆல் கிளிக் பீட்(all click feed) பேக்கேஜ்ஜை அவாஸ்ட் ஆண்டி வைரஸ் நிறுவனம், பிரபல ஆம்னி கான் மீடியா குரூப்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு 14 கோடியே 84 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு 15 கோடியே 80 லட்சத்துக்கும், 2021-ஆம் ஆண்டு 16 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் விற்க, விலை நிர்ணயம் செய்துள்ளது.
இதையொட்டி, அவாஸ்ட் மென்பொருள் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை விற்பனை செய்ய, அவர்களுடைய அனுமதியை வெளிப்படையாகவே கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. இணைய உலகத்தில் எப்போதும் தனி மனிதர்களின் பிரைவஸி என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில், இதுபோன்ற வர்த்தகம் இன்னும் ஆபத்துக்களை அதிகரிக்கவே செய்யும்.
Discussion about this post