முத்தமிழ், முக்கனி, மூவேந்தர் என தமிழ்நாட்டில் சிறப்பு மிக்க எல்லாமே மூன்று. அந்தவகையில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மூன்று ஜல்லிக்கட்டில் முதலாவது அவனியாபுரம்.
மதுரை மாவட்டத்தின் ஜல்லிக்கட்டுகள் தை மாதத்தின் முதல் நாளில் அவனியாபுரத்தில் இருந்துதான் தொடங்குகின்றன. அவனியாபுரம் மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். முன்னர் அவனிசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கபட்ட இதன் பெயர், காலப்போக்கில் மருகி தற்போது அவனியாபுரம் ஆகியுள்ளது. 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,587 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% பேர் ஆண்கள், 49% பேர் பெண்கள்.
முற்காலத்தில் மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்ததாகவும், தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் தற்போது அங்குள்ள அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி காட்சியளித்தாள் என்றும் புராணக் குறிப்புகள் கூறுகின்றன. மதுரையின் மிகப் பழமையான பகுதியே அவனியாபுரம் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 976 காளைகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் 643 காளைகளுக்கு தகுதிச் சான்று அளிக்கப்பட்டது. நேரமின்மையால் 440 காளைகள் மட்டும் களமிறங்கின. மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி முதலிடத்தையும், சூர்யா இரண்டாம் இடத்தையும், கோடீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 5 காளைகளுக்கும் வெற்றிப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் கலக்கப்போகும் காளை எது?, காளையர் யார்? என்பது திடலில் தெரிந்து விடும்.
Discussion about this post