அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 16 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தைத்திருநாளை ஒட்டி, வரும் 15 ஆம் தேதி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அனைத்து சமூகத்தினரையும் இணைத்து, இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 16 பேர் கொண்ட குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த 16 பேர் கொண்ட குழுவில், அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் இடம் பெற்று இருப்பார்கள் என்று தெரிவித்த நீதிமன்றம், காளைகள், குழுவின் உறுப்பினர்கள் என யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவுடன் தான், விழா கமிட்டினர் நன்கொடை பெற செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வரும் 21 ஆம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்த வீடியோ ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.