சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொறுத்துவது சாத்தியமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 24 ம் தேதி, சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரயிலில் தொங்கிக்கொண்டு பயணித்த 6 பேர் பக்கவாட்டுச்சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, புறநகர் ரயில்களில் மெட்ரோ ரயில்களை போன்று தானியங்கி கதவுகளை பொறுத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டனர்
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தெற்கு ரெயில்வே சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னையில் இயங்கும் மின்சார ரெயில்களில் தானியங்கி கதவு பொருத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டது. சென்னையின் தட்பவெப்பநிலையில் ,தானியங்கி கதவுகள் பொருத்தினால் குளிர்சாதனவசதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை ,சென்னை புறநகர் இரயில்கள் அனைத்திலும் தானியங்கி கதவு பொருத்தப்பட்டால் , 3ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Discussion about this post