டி20 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 மகளிர் உலககக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 மகளிர் உலககக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அரையிறுதியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.

டாஸில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி அலிஸ ஹீலே மற்றும் பெத் மூனி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறினர்.  அதிரடியாக விளையாடிய ஹீலே 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்ததும் ஆக்ரோஷமாக விளையாடிய ஹீலே, பத்தாவது ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் விளாசி ஷிகா பாண்டேவின் பந்துவீச்சை பதம் பார்த்தார். 11வது ஓவரில் ஹீலே, மூனி இணையை பிரித்தார் பந்துவீச்சாளர் ராதா யாதவ். 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ச் கொடுத்து ஹீலே அவுட்டானார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் மெக் லன்னிங் களமிறங்கினார். 15 பந்துகளுக்கு  16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகா பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக களமிறங்கிய ஆஷ்லி கார்ட்னர், ரேச்சல் ஹேனஸ் ஆகியோர் முறையே 2 மற்றும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலிய அணி. 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 78 ரன்களுடன் பெத் மூனியும், 5 பந்துகளில் 5 ரன்களுடன் நிகோலா கேரியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஷிகா பாண்டே 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் ஆஸ்திரேலிய அணியினர். 3 பந்துகளில் 2 ரன்களில் ஷஃபாலி வர்மா ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய தனியா பாட்டியா 2 ரன்களில் ரிட்டைர்ட் ஹர்ட் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெமியா  2 பந்துகளி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிருதி மந்தனா மோலினக்ஸ் பந்துவீச்சில் நிகோலாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 5.4 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

அடுத்ததாக களமிறங்கிய தீப்தி ஷர்மா மற்றும் வேதா கிருஷ்ண மூர்த்தி நிதானமாக விளையாடத்தொடங்கியது. ஆனால் நீண்ட நேரம் இந்த இணையை விளையாட விடாமல் பிரித்ஹ்டார் டெலிஸ்ஸா கிம்மின்ஸ். 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோனஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வேதா. அடுத்ததாக தீப்தி சர்மாவும் 33 ரன்களில் வெளியேற அடுத்தடுத்த வீரர்கள் கிரவுண்டுக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்தனர். சீட்டுக்கட்டு போல சரிந்த இந்திய அணியின் விக்கெட் 19.1 ஓவரில் மொத்தமாக முடிவுக்கு வந்தது.

19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ராஜேஷ்வரி கெய்க்வாட் மட்டும் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில்  சிறப்பாக பந்துவீசிய மேகன் 3.1 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெஸ் ஜோனஸன் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சோபி மோலினக்ஸ், டெலிஸா கிம்மின்ஸ், நிகோலா கேரி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு மற்றும் மிக மோசமான பேட்டிங் இந்திய அணியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தது. 39 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய அலைஸ்ஸ ஹீலே ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெத் மூனி தொடர் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் டி20 மகளிர் உலகக்கோப்பையை சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

Exit mobile version