உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 10 வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 10 வது லீக் போட்டியில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதியது. நாட்டிங்கமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 3 ரன்னிலும், ஆரோன் ஃபின்ச் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய உஸ்மான் கவாஜா 13 ரன்னில் ஆட்டமிழக்க, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த நில் 7 வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 102 ரன்கள் சேர்த்தனர். தொடந்து ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்னிலும், நில் 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 49 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது.
289 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவீஸ் 1 ரன்னிலும் கிறிஸ்கெயில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து களம் இறங்கிய ஷய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் இணை 3 வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோப் 68 ரன்னிலும், பூரன் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஹோல்டர் 51 ரன்னில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Discussion about this post