12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை பார்த்து வருகிறோம்.
4-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1987-ம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்தது.
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதல் உலக கோப்பை போட்டி இதுவாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலக கோப்பையை நடத்த எதிர்ப்பு காட்டின. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது பிடிவாதத்தை தளர்த்தி இந்த போட்டிக்கு அனுமதி அளித்தது. இதுவே உலக கோப்பை போட்டி சுழற்சி முறையில் வெவ்வேறு நாடுகளில் நடக்கவும் வழிவகுத்தது எனலாம்.
போட்டி 60 ஓவரில் இருந்து தற்போது நடைமுறையில் இருக்கும் 50 ஓவர்களாக மாற்றம் செய்யப்பட்டது.
முந்தைய உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்ட 8 அணிகள் இந்த முறையும் பங்கேற்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
கபில்தேவ் தலைமையில் களம் கண்ட நடப்பு சாம்பியனான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டாலும், அடுத்த ஆட்டங்களில் 16 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், 56 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் அடுத்தடுத்து வீழ்த்தியது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. 2 முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள்அணி முதல் முறையாக லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 18 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இங்கிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கடந்த உலக கோப்பை போட்டி அரைஇறுதியில் இந்திய அணியிடம் கண்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்ததுடன், இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
போட்டியை நடத்திய இரு நாடுகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாய் அமைந்தது. இங்கிலாந்து அணி, இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை வதம் செய்ததால், இறுதிப்போட்டியின் போது இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக ஆர்ப்பரித்தனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் தனது பரம எதிரியான இங்கிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை முதல் முறையாக வென்று ஆச்சரியப்படுத்தியது.
இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது.
75 ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Discussion about this post