சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, உபயோகமற்ற வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டதன் மூலம், சென்னை மாநகர காவல்துறைக்கு கிடைத்த 1 கோடியே 60 லட்சம் ரூபாய், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அப்புறப்படுத்தப்பட்ட 7 ஆயிரத்து 875 வாகனங்கள், மின்னணு ஏலம் விடப்பட்டன. இந்த விற்பனை மூலம் 2 கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 72 ரூபாயை மாநகராட்சி ஈட்டியுள்ளது. மாநகர காவல்துறைக்கு 75 சதவீத பங்களிப்பு தொகையாக, 1 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரத்து 804 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை, சென்னை மாநகரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளுக்காக, காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார். இந்த தொகையை வைத்து, சென்னை மாநகரத்துக்கு கூடுதலாக 2000 கண்காணிப்பு கேமராக்கள் வாங்க இருப்பதாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post