ஊரக உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வெளியான செய்திக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கதக்கது என்று, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கு ஊறு விளைப்பதை தடுத்திட, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தக்க முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும், தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post