டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், ஹாலிவுட் திரை பிரபலங்களின் பதிவுகளால், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எப்போதும் இல்லாத விதமாக ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகமே பதிலளித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டம் 70வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் தாங்கள் இணைந்து நிற்கிறோம் என கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறித்து ஏன் நாம் பேசவில்லை என பாப் பாடகி ரிஹானா கேள்வி எழுப்பியுள்ளார். ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால், சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதே சமயம், டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள் என்றும் பாடகி ரிஹானாவை முட்டாள் என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். இதுபோன்றவர்களால், நாடு பாதிப்படையும் போது, தேசத்தை சீனா கையகப்படுத்தி சீன காலனியாக மாற்ற வாய்ப்புண்டு என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச பிரபலங்களின் கவனம் விவசாயிகளின் போராட்டம் பக்கம் திரும்பவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வேளாண் சட்டங்கள், நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. மிகச்சிறிய அளவிலான விவசாயிகளே இதை எதிர்க்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு தொடர்ந்து அவர்களுடன் அரசு உரையாடி வருகிறது. இதுவரை போராட்டம் நடத்தும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சட்டங்களை நிறுத்திவைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமரே தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார் என்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பிரபவலங்கள் ஆர்வமுடன் பேசுவது துரதிஷ்டவசமானது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post