அணு குண்டு வீசப்படாத, அணு உலைகள் இல்லாத ஒரு சிறிய தீவுநாடு அணுக்கதிர் வீச்சின் உச்சபட்ச பாதிப்பில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. பசிபிக் கடலில் உள்ள மார்ஷல் தீவின் பரிதாப நிலை குறித்து பார்ப்போம் இந்த செய்தித் தொகுப்பில்…
அணு குண்டு வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா, அணு உலையில் கசிவை சந்தித்த உக்ரேனின் செர்னோபில் இவற்றில் இருந்து வெளியேறும் கதிரியக்கத்தைவிடவும் அதிகமான கதிரியக்கம் பசிபிக் கடலைச் சேர்ந்த மார்ஷல் தீவுகளில் வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது உலகெங்கும் உள்ள அறிவியல் ஆய்வாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
முன்னர் சோவியத் ரஷ்யா அமெரிக்கா இடையே பனிப்போர் நடந்த போது பல்வேறு அணு ஆயுத சோதனைகள் அமெரிக்காவிற்கு அருகே உள்ள மார்ஷல் தீவில் நடந்தன. அந்த சோதனைகளின் விளைவாகவே இப்போது மார்ஷல் தீவுகளில் இருந்து கதிரியக்கம் வெளியாவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஆய்வுகள் கூறும் தகவல்களின்படி, 1946 ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா சுமார் 70 அணு ஆயுதங்களை இங்கு வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளது. மிகக் குறிப்பாக, 1954ஆம் ஆண்டில் இங்குள்ள பிகினித் தீவில் அமெரிக்கா வெடிக்க வைத்து சோதனை செய்த அணு குண்டின் ஆற்றலானது ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டின் ஆற்றலைவிட 1000 மடங்கு அதிகமானது என்று கூறப்படுகிறது. அது போன்ற அணுகுண்டுகளின் விளைவுகளே இப்போது மார்ஷல் தீவைப் பதம் பார்க்கின்றன.
இதனால் தற்போது, மார்ஷல் தீவுகளில் கதிரியக்கம் உணரப்படும் இடங்களில் வசித்தவர்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த 2மார்ஷல் தீவுகளில் இப்போது மனிதர்களே இல்லை. மார்ஷல் தீவுகளின் ஒட்டுமொத்த மக்களில் மூன்றில் ஒருவர் இதனால் அகதியாகி உள்ளார்.
அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்ட போது, மார்ஷல் தீவுகள் குடியரசிடம் அமெரிக்க அரசு போட்ட ஒப்பந்தகளின் படி அமெரிக்க அரசு செயல்படவில்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மார்ஷல் தீவுகளில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் கடலில் கலப்பதால், இதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் உணரப்படும் அபாயமும் உள்ளது.
இது குறித்த விவரங்கள், ‘நேஷனல் அகாதமி ஆஃப் சயின்ஸ்’ – என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளன.
Discussion about this post