குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
71வது குடியரசு தின விழா, நாளை நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா சார்பில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து தனி விமானம் மூலம் டெல்லி வந்துள்ள அவருக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ மரியாதையுடன், வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் பிரேசில் அதிபரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து , குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், விழா நடைபெறும் ராஜ பாதை முதல் செங்கோட்டை வரையிலான பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், காவல்துறையினர், ராணுவ வீரர்கள் உட்பட 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதே போல், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுழற்சி அடிப்படையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாம்பன் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Discussion about this post