முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விவசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்ட இல்ல பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்தினால் மட்டுமே பல்வேறு சந்தேகங்களுக்கு சசிகலாவிடம் பதிலை பெற முடியும் என ஆறுமுகசாமி ஆணையம் கருதுவதால் விரைவில் பெங்களூரு செல்ல முடிவு செய்துள்ளது.
இதற்காக பெங்களூரு சிறைத்துறையுடம் அனுமதி பெறுவதற்கான பணிகளையும் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் ஆறுமுகசாமி பெங்களூரு செல்ல உள்ளார். ஆணையம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வரை கால அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்கனவே காலஅவகாசம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post